புதுடெல்லி, 4 ஏப்ரல் 2009 : ஜி-20 நாடுகளின் தலைவர்கள் புதிய வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் தடைகளை விதிக்காவிட்டால், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
லண்டனில் நேற்று முடிவடைந்த ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில், " உள்நாட்டு தொழில்களுக்கு பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட கூடாது. மற்ற நாடுகளின் பொருட்களுக்கு தடை, கட்டுப்பாடு விதிக்க கூடாது " என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், புதிதாக உள்நாட்டு தொழில் பாதுகாப்பு நடவடிகைகளை எடுக்காவிட்டால், இந்திய ஏற்றுமதி ஜுன் மாதத்தில் பழைய நிலைக்கே உயரும் என்று கூறியுள்ளார்.
சென்ற நிதி ஆண்டின் (2008-09 ) முதல் ஆறு மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 30 விழுக்காடு அதிகரித்தது.அக்டோபர் மாதத்தில் இருந்து குறைய துவங்கியது.கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்றுமதி 12.1 விழுக்காடு குறைந்தது..
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 21 விழுக்காடு குறைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து 2007-08 நிதி ஆண்டில் 162 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
சென்ற நிதி ஆண்டில் (2008-09) ஏற்றுமதி இலக்கு 200 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இலக்கு 175 பில்லியன் டாலாரக குறைக்கப்பட்டது.
இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்கு 35 விழுக்காடாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த வருடம் உலக அளவிலான வர்த்தகம் 9 விழுக்காடு குறையும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது.